-->

அண்மை

தலித்துகளையும் பெண்களையும் குறிவைக்கும் குடியரக்கன் - நிவேதிதா லூயிஸ்

தலித்துகளையும் பெண்களையும் குறிவைக்கும் குடியரக்கன்
ஓவியம் - சாய் அரிதா

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டையே உலுக்கிப் போட்ட கள்ளச்சாராயச் சாவுகள் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தன. கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் காவல் நிலையம், நீதிமன்றம் என எல்லாமும் இருக்கின்றன. இன்று அதே நீதிமன்றம், ‘கள்ளச்சாராய சாவுகளுக்கு இழப்பீடாக எப்படி மக்கள் வரிப்பணத்தில் இருந்து பத்து லட்ச ரூபாயை அறிவிக்கலாம்? அவர்கள் என்ன விடுதலைப் போராட்ட வீரர்களா?’1 எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

சமூக ஊடகங்கள் முழுவதும் தங்களை பரிசுத்தராகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கும் மத்திய வர்க்கம், ‘கள்ளச்சாராயம் குடித்து கொழுப்பெடுத்து செத்தவனுக்கு என் பணத்தை எப்படி கொடுக்கலாம்?’ என கம்பு சுற்றியது. இத்தனைக்கும் இவர்கள் வீடுகளிலும் குடிப்பவர்கள் உண்டு. ‘சோஷியல் டிரிங்க்கர்’ என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் வீரர்கள் உண்டு. குடி என்றால் எல்லாம் குடிதான், இல்லையா? அதிலென்ன சமூகக் குடி, மொடாக் குடி? இதில் பெரும்பான்மையினர் இடைநிலைச் சாதிகள் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இறந்துபோனவர்களில் பெரும்பான்மையினர் தலித் சமூகத்தினர் என்பதைக் கொண்டு இந்த ‘குறிப்பறிந்து வாள்வித்தை வீரர்கள்’ வாள் வீசிக்கொண்டு இருந்தனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம், நேரில் விசாரணை நடத்திய பிறகு முன்வைத்திருக்கும் கருத்து மிக முக்கியமானது. இந்தப் படுகொலையை, (ஆம், இது அரசு மெத்தனத்தால் நடந்த படுகொலை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருந்துவிட முடியாது) பட்டியல் சாதி/பழங்குடி சமூகச் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கொண்டுவந்து அதன்படி விசாரணை நடத்தி தண்டனை வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தப்போவதாக இதன் தலைவர் ரவிவர்மன் தெரிவித்திருக்கிறார்.

“இந்தச் சம்பவம் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வரவில்லை என்றாலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை அனுமதித்ததில் அதிகாரிகளின் பங்கு பற்றிய ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள், மேலும் SC/ST சட்டத்தின் விதிகளை செயல்படுத்த ஆணையம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தும்”, என்று அவர் கூறியுள்ளார்.2

இதில் மாநில அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது; அதன் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அனைவருக்கும் அப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வது குறித்து தெரியாமல்போக வாய்ப்பில்லை. அவர்களின் முழு ஒத்துழைப்பின்றி சம்பந்தப்பட்ட குற்றவாளி பத்து ஆண்டு காலம் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்றிருக்கவே முடியாது. கள்ளக்குறிச்சி பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் தொடர்ச்சியாக இந்தப் பிரச்னை குறித்துப் பேசி வந்துள்ளார். ஆனால் அதனால் எவ்வித பயனும் விளைந்ததாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பொதுச் சமூகம், ‘தலித்துகள் குடித்து சீரழிபவர்கள்’ என்ற பொதுமையை அப்படியே எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு அதையே மீண்டும் வலியுறுத்திப் பேசி வருகிறது. தலித் மக்கள் செய்யும் பெரும்பான்மை பணிகளான தூய்மைப் பணிகள், மலம் அள்ளும் தொழில், தோல் பதனிடும் தொழில் போன்றவை கடும் மனித உழைப்பைக் கோருபவை. அவர்களின் உழைப்பை ஒரு பக்கம் உறிஞ்சிக் கொண்டே, அவர்களது வாழ்க்கை முறைகளைப் பரிகாசம் செய்யும் அவலம் இது. இந்தியா முழுக்க ஐந்து மில்லியன் மக்கள் மலம் அள்ளும் பணியை செய்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.3 இதன் காரணமாக சமூக ஒதுக்கம், வாழிட சிக்கல், வன்முறை உள்ளிட்டவற்றை இம்மக்கள் சந்திக்கின்றனர் என இந்த ஆய்வு சொல்கிறது. இவ்வாறான மக்களில் 98% பேர் தலித் சமூகத்தினர் என்கிறது இந்தத் தொழிலாளர்களுக்கான போராட்டங்களை  முன்னெடுக்கும் சஃபாய் கர்மச்சாரி ஆந்தோலன் அமைப்பின் வலைதளம்.4

இப்படி சமூகத்தின் கடைசி அடுக்கில் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் தலித் மக்களிடம் குடிக்கும் வழக்கம் பிற சாதியினரைவிட அதிகமே, இதற்குக் காரணம் அவர்களின் தொழில், வாழும் சூழல், அழுத்தும் கடன் சுமை என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS)-4 (2015-16) தரவுகளின்படி, நாட்டின் 41% பழங்குடியினர் மற்றும் 31% பட்டியல் சாதி ஆண்கள் குடிக்கிறார்கள். மற்ற / உயர் சாதி ஆண்களில் 21% மட்டுமே குடிக்கிறார்கள் எனத் தரவுகள் சொல்கின்றன.5 இந்தத் தரவுகளின்படி பார்த்தால், பிற சாதி ஆண்களைவிட எண்ணிக்கையில் பட்டியல் சாதி ஆண்கள் 10% அதிகமும், பழங்குடியினர் 20% அதிகமும் குடிக்கின்றனர் எனத் தெரிகிறது.

செய்யும் தொழில் காரணமாக பட்டியல் சமூகம் அதிகம் குடிக்கின்றனர் என்ற வாதத்தை இந்தத் தரவு நிரூபிக்கிறது. எது எதற்கோ கருவிகளைக் கண்டுபிடிக்கும் இந்தப் பொதுச் சமூகம், மலம் அள்ளும் தொழிலில் இருந்து, சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலில் இருந்து, பிறப்பின் அடிப்படையில் இந்தப் பணிகளைச் செய்ய வற்புறுத்தப்படும் தலித் சமூகத்தை விடுதலை செய்ய இதுவரை எந்தக் கருவியையும் சரிவர கண்டுபிடிக்காதது ஏன், அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவராதது ஏன் என்ற கேள்விகளை பொதுச் சமூகத்திடம் நாம் தாராளமாக முன்வைக்கலாம். சென்னை ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில்கூட ‘sewage engineering’/ ‘water/waste eater engineering’ போன்ற பொறியியல் படிப்புகள் இல்லை என்பதை மூத்த தலித்திய ஆய்வாளர் ஒருவர் சுட்டினார். இப்படி அந்த மக்களை மலக்குழியில் இருந்து அகற்ற எவ்விதத்திலும் முனையாத பொதுச் சமூகம்தான், ‘ஆம்பளையும் பொம்பளையுமா குடிச்சு செத்துப் போனாங்க’ எனப் பேசுகிறது.

அரசின் டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் எல்லோரும் நன்றாக வாழ்கிறார்களா? அதில் வாங்க முடியாத மக்களே கள்ளச்சாராயம் நோக்கி திரும்புகின்றனர். குடி என்பதே இங்கு பெரிய சிக்கலுக்குரிய விஷயமாக இருக்கும்போது அதனால் பெரிதாக பாதிப்படைபவர்கள் பெண்களே. குடிக்கும் கணவர்கள், தந்தைகள், அண்ணன் தம்பிகளால் அடி உதைக்கு ஆளாவது, அவர்களை நம்பிப் பயனில்லை என இளம் வயதில் குடும்பப் பொறுப்பையும் கடனையும் சுமப்பது, கூடவே சாதி இழிவையும் சேர்ந்து சுமப்பது என பல்முனைத் தாக்குதலுக்கு ஆளாபவர்களாக பெரும்பாலும் தலித் பெண்களே இருக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பெரும்பாலும் பின் தங்கியவர்களான தலித் சமூக ஆண்களை, கல்வி, அது தரும் அதிகாரத்தை நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குடியின் தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்பது என்பது பெரும் சவாலாகவே இருந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பநல்லூர் என்ற கிராமத்தில் சமீபத்தில் களப்பணிக்கு சென்றபோது, அங்குள்ள தலித் பெண்கள் தங்கள் பெரும் பிரச்னையாக சுட்டியது குடிப்பழக்கத்தைத்தான். டாஸ்மாக்கில் மட்டுமல்லாமல் அங்கங்கே கொண்டுவந்து ‘பாக்கெட் சாராயம்’ விற்கப்படுவதைப் பதிவு செய்யும் பெண்கள், மாலை நேரம் வந்துவிட்டாலே சம்பாதித்துக் கொண்டுவரும் பணத்துடன் ஆண்கள் ஊர் எல்லையில் உள்ள ஆற்றங்கரைப் பக்கம் குடிக்கச் சென்றுவிடுவதை வருத்தத்துடன் சொல்கின்றனர். பெரும்பாலும் பெயின்டிங் வேலை அல்லது நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிக்குச் சென்று கொண்டு வரும் கொஞ்சப் பணமும் இப்படிச் சென்றுவிடுவதால், பெண்கள் கார்மென்ட் தொழிற்சாலைகளில் சொற்ப வேலைக்குச் செல்ல நேரிடுகிறது.

அங்கும் உழைப்புச் சுரண்டலை இந்தப் பெண்கள் சந்திக்க நேர்கிறது. எட்டு மணி நேர வேலை என்பது நிர்ணயிக்கப்பட்டாலும், பயண நேரம் அதில் பாதி ஆகிவிட்டால், வீடுகளை கவனிப்பது பெரும் சுமையாகிறது. கல்வி பயிலும் குழந்தைகளை பால்வாடியில் விட்டுச் செல்லலாம் என்றால்கூட அதற்கும் நிரந்தரக் கட்டடம் இல்லாமல் தவிக்கின்றனர் இந்த ஊர்ப் பெண்கள். பணி இடங்களில் விபத்து ஏற்பட்டாலோ, சரியான நிவாரணம் தரப்படாமல் கைகழுவி விடப்படுகின்றனர். அப்படிப்பட்ட பெண் ஒருவரை சந்தித்து உரையாட நேர்ந்தது. இத்தனைக்கும் ஓரளவு இடதுசாரி சிந்தனை கொண்ட, விபரமறிந்த தலித் பெண் அவர். கிறிஸ்தவ ‘தலித்துகளாக’ வாழ்வதில் கூடுதல் சிக்கலும் இவர்களுக்கு உண்டு. பிற்படுத்தப்பட்டோராக சட்டம் அடையாளம் காணும் இம்மக்கள், இன்னும் பறை இசைப்பதில் இருந்தும், இந்துக் கோயில் விழாவுக்கு பறை இசைக்கும் ‘பாரம்பரியத்தில்’ இருந்தும் விடுபட முடியாமல் தவிக்கின்றனர். 1980களில் இவர்களுக்கு பக்கபலமாக இருந்து விடுதலையை நோக்கி நகர்த்திய இயேசு சபை குருக்கள் இவர்களுக்குத் தந்த கல்வி, ஓரளவுக்கு சிலரை அதிகாரம் நோக்கி நகர்த்தி இருந்தாலும், தொடர் செயல்பாடு இல்லாத காரணத்தால் மீண்டும் குடியை நோக்கி நகர்ந்துள்ளது இந்த கிராமம்.

இவ்வூரில் சந்தித்த தலித் தகவலாளர் ஒருவர், எவ்வித சரியான பணிக்கும் செல்லாமல் அவ்வப்போது பேண்ட் செட் ஒன்றை ஒருங்கிணைத்து, பறை இசைக்கச் செல்வதைப் பகிர்ந்தார். அவர் நம்மிடம் பகிராத விஷயம், அவர் எப்படி ‘rehab’ என மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் மீண்டும் குடிக்கே சென்று வீழ்கிறார் என்பது. இவ்வாறு குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் நபர்கள் குடியிருக்க நிரந்தர வீடுகள் இன்றி, எப்போதாவது கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அதையும் குடித்தே அழிக்கும் நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். மகன்கள் நகரத்துக்கு பெயின்ட் அடிக்கும் வேலைக்கு சென்றுவிட்டாலும்கூட, ஊர்க்குடி அவர்களை மீண்டும் ஊருக்குள்ளேயே இழுத்துக் கொண்டுவிட்டது என்பதையும், மகன்கள் உள்ளூரிலேயே குடித்துச் சீரழிவதையும் பதிவு செய்தார் அவர். குடிதான் ஊரின் பெரிய சிக்கல் என அந்தப் பங்கின் பங்குத் தந்தையும் பதிவு செய்தார்.

இந்த ‘ஊர்’, ‘உறவு’, ‘நட்பு’ என குடிக்கத் தொடங்கும் ஆண்கள் அதிலேயே சிக்குண்டு அந்தச் சுழலில் இருந்து மீள்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது என தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார் அவ்வூர் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் அருள்சகோதரி ஒருவர். 1980களில் இவ்வூரில் சட்டத்துக்குப் புறம்பாக சாராயம் விற்றபோது, தலித் பெண்கள் குழுவாக சேர்ந்துகொண்டு அந்தக் கடைகளை அடித்து நொறுக்கி, கைதாகி காவல் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு விடுதலையானவர்கள். தீர்மானம் போட்டு, இதைச் செயல்படுத்திய அவர்களே இன்று கைகட்டி இதை வேடிக்கை பார்க்கும் சூழல் நிலவுகிறது. காரணம் – இன்று சாராயம் விற்பது அரசு. அதை எதிர்த்து என்ன செய்ய முடியும் என்ற கையாலாகாத நிலையை அந்தப் பெண்கள் என்னிடம் பகிர்ந்தனர்.6 குடிக்கு எதிராகப் போரிட்டு காவல் நிலையம் சென்ற பெண்கள்குழு இன்று சிறுசேமிப்பு, சிறுகடன் என தங்கள் பணியை சுருக்கிக் கொண்டது பெரும் அவலமே. இந்தக் குடிப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படும் தலித் பெண்கள் அதற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாமல் அவர்களின் நாவுகளும் கைகளும் கட்டுண்டு கிடக்கின்றன.

சமூகச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விடுத்து கடன் வாங்கித் தரும் அமைப்புகளாக மாறிப்போனதை சமூக அவலம் எனப் பதிவு செய்திருக்கிறார் அருள்தந்தை பி.பி.மார்ட்டின். ‘1991லிருந்து இப்பெண்களின் அமைப்புகள் எல்லாம் உடைக்கப்பட்டு, சிறு சுய உதவிக்குழுக்களாகச் சிதறடிக்கப்பட்டன. பெண்ணுரிமை அமைப்புகள் எல்லாம் சிறுசேமிப்பு சங்கங்களாக ஆக்கப்பட்டுவிட்டன. இங்குள்ள சில அரசியல் கட்சிகள் தாங்கள்தான் இந்தச் சுயஉதவிக் குழுக்களுக்களின் பிதாமகர்கள் என்று அண்டப்புளுகுகளை அள்ளி வீசினாலும், உண்மையில் உலக வங்கியும் உலகமயமாக்கலும் நாட்டில் ஊடுருவிய சமயத்தில் இவை ஒரு பன்னாட்டு அமைப்பின் (ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயப் பிரிவான FAOவின் கிளையான IFAD) தூண்டுதலாலும் நிதி உதவியாலும் இவை உருவாக்கப்பட்டன. இன்னும் உருவாக்கப்படுகின்றன என்பதை விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள். இந்த நாசவேலையில் பல தொண்டு நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டு, அவற்றின் மனித உரிமைப் பணிகளிலிருந்து திசை மாற்றப்பட்டன. இன்றைய மனித உரிமை யுகத்தில் இது ஒரு பெரும் பின்னடைவு.’ 7

தந்தை மார்ட்டினின் இந்தப் பார்வை மிக முக்கியமானது. பெண்களை அமைப்புகளாக, குடிக்கு எதிரான குழுக்களாக, சங்கங்களாகத் திரட்டுவதில் உள்ள அடிப்படை சிக்கலினை அவர் பதிவு செய்துள்ளார். ஆக, அரசே முன்னெடுத்து விற்கும் சாராயத்தையும் எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது. என்னதான் சாராயம் விற்று கிடைக்கும் நிதி பெண்கள் நலத்திட்டங்களுக்கும் சேர்த்தேதான் போகிறது என வாதிட்டாலும், அப்பெண்களின் தாலியைப் பிடுங்கிக்கொண்டு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. டாஸ்மாக்கை ஒழிக்க முடியும்; கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும். மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒழுங்காக ஒதுக்கினால், மாநில அரசு மதுவை நம்பி ஆட்சி நடத்த வேண்டிய தேவையில்லை. அந்த அரசியலையும் சேர்த்தே நாம் பேசவேண்டி உள்ளது. மக்களிடம் ஊறியிருக்கும் ‘குடிப் பண்பாட்டை’ ஒழிக்காமல், இது எதுவுமே சாத்தியம் இல்லை.

தமிழ்நாடு மதுவிலக்கு (மாற்றம்) சட்டம், 2024 மூலம் 1937ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தின் சில பிரிவுகளில் மாற்றம் செய்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள், குடிப்பவர்களுக்குத் தண்டனையை இன்னும் கடுமையாக்கியுள்ளது அரசு.8 அரசின் இந்த முடிவு வரவேற்க வேண்டியதுதான் என்றாலும், கள்ளச்சாராய ஒழிப்பை மட்டுமே முன்நிறுத்துகிறது. அரசு விற்கும் மது? அதனால் விளையும் தீமைகளை எப்படி சரி செய்வது?

‘மதுபானம் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நுகர்வைக் குறைக்கலாம், ஆனால் உடனடியாக நிறுத்த முடியாது. இதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும்/அல்லது மதுபானங்களின் விலையை உயர்த்துதல்/ வரி விதிப்பு சரியான நடவடிக்கையாக இருக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றொரு கொள்கை, முழு மக்கள் மதுவிலக்கு. இதற்கு, கிராமப்புறங்களில் இருக்கும் மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படவேண்டும். இருப்பினும், இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தரப்பில் அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது.9 கூடுதலாக கிராமப்புறங்களில் அரசு புனர்வாழ்வு மையங்களை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் என்றும் இந்த ஆய்வு ஆலோசனை தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களிலும் இவை செயல்படுத்தப்படவேண்டும் என்பதே நம் வேண்டுகோள். நூற்றாண்டு காலமாய் தமிழ்நாட்டை பீடித்திருக்கும் பெருநோய்க்கு ஓரிரு பத்தாண்டுகளில் தீர்வு காணமுடியாதுதான். ஆனால் அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்.

வர்க்கம் சார்ந்த சிக்கலாக குடியைப் பார்க்காமல், சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்னையாகப் பார்த்து, சமூக, சட்ட, அரசியல் தளங்களில் கூட்டுப் போராட்டம் நடத்தாவிட்டால், தமிழ்நாடு தன் பாரம்பரியத்தை, பண்பாட்டை, விழுமியங்களை குடி என்ற அரக்கனுக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டு, காலத்துக்கும் இந்த அவலத்தைச் சுமந்து திரியும். நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டுச் செல்லப் போகும் தமிழ்நாடு குடியில்லா தமிழ்நாடாகட்டும். உண்மையில் இங்கு விடியட்டும். 

தரவுகள்

  1. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Jul/06/why-rs-10-lakh-aid-to-kin-of-kallakurichi-hooch-victims-madras-hc-questions-tn-govt
  2. https://www.thehindu.com/news/national/tamil-nadu/kallakurichi-hooch-tragedy-national-commission-for-scheduled-castes-conducts-inquiry-at-karunapuram/article68320112.ece
  3. https://journals.library.brandeis.edu/index.php/caste/article/view/299/60
  4. https://www.safaikarmachariandolan.org/
  5. Caste, Conservative, Colonial, and State Paternalism in India's Alcohol Policies Shivakumar Jolad, Chaitanya Ravi, Indian Public Policy Review 2022, 3(5): 87-106
  6. கிறிஸ்தவத்தில் ஜாதி, நிவேதிதா லூயிஸ், ஹெர் ஸ்டோரீஸ், 2024. பக். 145, 147, 161, 175
  7. அறப்பணி – அருட்தந்தை பி பி மார்ட்டின்
  8. https://www.business-standard.com/politics/tn-amends-law-after-deaths-enhances-punishment-for-illicit-liquor-sale-124062900576_1.html
  9. ADVERSE EFFECTS OF ALCOHOL CONSUMPTION AND ITS IMPACT ON SOCIETY IN TAMILNADU S. Prabhu, International Journal of Multidisciplinary Research and Modern Education (IJMRME) ISSN (Online): 2454 - 6119 (www.rdmodernresearch.com) Volume II, Issue II, 2016
Author Picture

நிவேதிதா லூயிஸ்

Her Stories அமைப்பின் இணை நிறுவனர். வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கிவருபவர். மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் வரலாற்றை முனைப்போடு மக்களிடம் கொண்டு செல்பவர். 'அறியப்படாத கிறிஸ்தவம்', 'கிறிஸ்தவத்தில் சாதி' 'வடசென்னை வரலாறும் வாழ்வியலும்', 'கலகப் புத்தகம்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு