-->

அண்மை

விடியலின் இரகசியம் - மாதவிக்குட்டி (மலையாளத்திலிருந்து தமிழுக்கு மோனிகா.க)


அவள் ஒரு வாய்பேசாதவள் மற்றும் முட்டாள் என புரிந்து கொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. ஆனால் அவளின் மனநிலைக் குறைபாடானது என்னில் அவளிடமான விருப்பத்தை இன்னும் தூண்டியது. கொழுத்த அந்த கைகால்களை அழுத்தி வலியை ஏற்படுத்தவும், எப்போதும் ஈரமான அந்த உதடுகளை முத்தமிட்டுத் தழுவவும் நான் மிகவும் விரும்பினேன். ஒருநாள் காலையில் அவளின் அறை திறக்கும் சத்தம் கேட்டு நான் எழுந்தேன். நான் சத்தம் போடாமல் அவளின் அறையை நோக்கிச் சென்றபோது, விடியலை எதிர்பார்க்கும் அந்த இருட்டில் சிவந்த துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு அவள் நடக்க இறங்கினாள். அப்போது விடுதியில் வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. எல்லா இடங்களும் இருட்டால் சூழ்ந்திருந்தது.

நான் எதிர்பார்த்த நாள் வந்ததாக என் மனது சொன்னது. வாசல் படியைக் கடந்து கீழே இறங்கி அந்தச் சிவந்த பாதையை அடைந்ததும் அவள் திரும்பிப் பார்த்தாள். என்னைப் பார்த்து அவள் பதட்டம் ஏதும் கொள்ளவில்லை. நான் வருவேன் என்ற எதிர்பார்ப்பு அவளின் முகத்தில் தென்பட்டது. தன்னைப் பின் தொடரும்படியான சைகையைச் செய்துவிட்டு அவள் நடக்க ஆரம்பித்தாள். பாதையின் இருபுறமும் முள் செடியால் நிறைந்திருந்தது. அவள் திடீரென குன்றின் மேல் பகுதிக்கு செல்ல ஆரம்பித்தாள். பாவாடையைத் தூக்கி அவள் நடக்கையில் அவளின் முழங்கால்கள் என் விருப்பத்தை இன்னும் அதிகப்படுத்தும் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

குன்றின் உச்சத்தை அடைந்ததும் அவள் நின்றாள். நான் அவளை என் மார்போடு அணைத்து முத்தமிட்டேன். அவள் என்னை உதறிவிட்டு தலையை ஆட்டினாள்.

“பின் என்ன நினைத்து நீ என்னை இங்கு அழைத்து வந்தாய்”

நான் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டே கேட்டேன்.

அவள் என் கால்களுக்குக் கீழே எத்தனையோ வாரங்களுக்குப் பின்னால் மலையடிவாரத்தில் பனிக்கூட்டத்தினிடையில் உதயமாகும் சூரியனை எனக்குக் காட்டித் தந்தாள். சிவப்பு நிறத்தைக் கொண்ட முழுமையான வட்டமான சூரியன்.

அவளின் கண்களில் அந்த வெளிச்சத்தை அன்றுதான் நான் முதன்முதலாகக் கண்டேன்.

“சூரியன்”

நான் கூறினேன். அவள் சிரிப்போடு தலையாட்டினாள். நான் அன்புடன் அவளின் கையைப் பிடித்துச் சொன்னேன்.

“வா தங்கச்சி இனி நாம் விடுதிக்குச் செல்லலாம் உன்னுடைய தாய் உன்னைத் தேடுவாள்”.

Author Picture

மாதவிக்குட்டி

கமலா சுரய்யா என்பது இவரது இயற்பெயர். மாதவிக்குட்டி எனும் புனைப் பெயரால் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார். என் கதை, பாலிய கால மரணங்கள், நீர்மத்தலம் பூத காலம், கல்கத்தாவில் கோடைகால சந்ததியினர் என்பவை இவரின் முக்கிய படைப்புகள் ஆகும்.  சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.இவரது படைப்புகள் பொதுவாக பெண்களின் பிரச்சனைகள், குழந்தைப் பராமரிப்பு, அரசியல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக அமையும்.

Author Picture

மோனிகா.க

கேரளா, பாலக்காட்டைச் சேர்ந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

மின்னஞ்சல் - monikakannan2507@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு