பெண்ணப்பா
பெண்ணப்பா என்று,
நாடே அழைக்கும்
அப்பனுண்டு.
எல்லா அப்பனும்
ஆணப்பனாகையில்
என்னுடைய அப்பன் மட்டும்
பெண்ணப்பன்.
பெண்ணப்பன்
அம்மா இறக்கும் முன்னே,
மீன் ஆய்வான், அடுப்பூதுவான்,
வீடு பெருக்குவான்,
ஆற்றில் இறங்கி
துணி அலசுவான்.
பாவாடையும் சேர்த்துக் கழுவுடா
சும்மா ஆம்பளைய சொல்ல வச்சுக்கிட்டு,
என்று கரையிலிருந்து,
வாய் கிழிப்பார்கள்,
பெண்ணப்பன் உடனே
என்னைப் பார்த்துச் சிரிப்பான்,
நூற்றாண்டுகளின்
கரையை நீக்குகிறேன் என
சித்தாந்தம் பேசுவான்,
மூக்கில் கை போட்டு
நான் பெண்ணப்பனின்
வாயைப் பார்ப்பேன்
அடிப்பாவாடை என்ன
அவ்வளவு தவறான ஒன்றா?
நான் பெண்ணப்பனிடம் கேட்பேன்
அடியில் உள்ள அனைத்தும்
தவறானதே என
மீண்டும் சித்தாந்தம் பேசுவான்
உறுப்பு கெட்டவனே, பொட்டே, மொன்னே
என ஊரே கூவும்
அம்மாவும் சொல்வாள்
வீடு பெருக்க வேண்டாம்,
துவைக்க வேண்டாம் என
பெண்ணப்பன் சிரிப்பான்
பக்கத்து வீட்டு
ஆணப்பன்மார்கள் மனைவிகளைத்
தேங்காய் துருவியால்
அடித்து வீழ்த்துவார்கள்,
திட்டுவார்கள்,
குழந்தைகளையும் அடிப்பார்கள்
வேட்டியைத் தூக்கி
விறைப்பான உறுப்பைக் காட்டி
மானம் கெடுப்பார்கள்
பெண்ணப்பன்
இவை ஒன்றும்
செய்ததில்லை
துவைத்தல்,
பெருக்கல்,
செடி நடுதல்
இவை தவிர
ஒன்றும் செய்ததில்லை
பெண்ணப்பன் எங்கோ
போனபோது,
அழுக்குத்துணி இல்லாமலேயே
அம்மா ஆற்றில் இறங்கினாள்
நான் குழி நரியைப் பிடித்து
திரும்ப விட்டு,
பின் மண் இட்லி
சுடுவதற்கு,
முக்கண்ணு கொட்டாங்குச்சியைத்
தேடி தோட்டத்திற்குச் சென்றேன்
பின்பு அம்மாவைக் காணவில்லை
பெண்ணப்பனின் இயலாமை
ஆணப்பன்மார்கள்
வளைத்திருப்பார்கள் என
கரைக் கல்லும் வசனம் பேசியது
பெண்ணப்பன் ஒன்றும் பேசவில்லை,
என்னையும் தூக்கி
ஆணப்பன்களைத் தாண்டி
எங்கோ சென்றான்,
ஆற்றில்,
மழையில்,
வெயிலில்,
அடுப்பில்,
அடிப்பாவாடைகளில்!