ஓவியம் - சாய் அரிதா |
இருள் நிலையானது
இருள் மெய்யானது
தொழிற்சாலை வைத்து ஒளியை ஆக்குவது போல
இதுவரை எவரும் இருளைப் படைத்ததில்லை
அவ்வளவு சுலபமாக இருளைப் படைக்க முடியுமா
என்று எனக்குத் தெரியவில்லை
நமது வெளிச்ச விளையாட்டுகளை
மறைவாக நின்று வேடிக்கை பார்க்கிறது இருள்
அலையில் மறையும் ஆழ்கடலைப் போல
செயற்கை நிலா செயற்கை சூரியன்
ஒற்றை இரவை மறைக்க எதிர்க்க
எவ்வளவு சிறப்பான பன்னாட்டுப் போட்டி
சந்திர மண்டலம் சூரிய மண்டலம்
நட்சத்திரக் கூட்டம் யாவும்
ஒரு நாள் கருந்துளைக்குள் விழுந்து விடுமோ
கருந்துளையை ஒளி விளக்காய்
ஆக்க முடியுமா
கருந்துளையில் துளை இருக்கிறதோ இல்லையோ இருள் இருக்கிறது
இந்த உலகமே கருந்துளைக்குத்தான் சொந்தம்
கருந்துளைவாசியான நானும்
கருந்துளை வடிவானவன் தான்
ஒளியின் மத்தியில் துளி இருள் இருக்குமே
அதுதான் எனது கண்கள்
அந்தக் கண்களின் வழியாகத்தான்
உங்களை நான் வேடிக்கை பார்க்கிறேன்
நீங்கள் என்னை வேடிக்கை பார்ப்பதுபோல
அல்ல இது கொஞ்சம் வித்தியாசமானது
இருட்டைப் பழகியவருக்குத் தான்
இவ்விருப்பு பிடிபடும்.
மு.ரமேஷ்