-->

அண்மை

சிறகை விரிக்கும் சொற்கள் - திருநர் & குயர் மக்களுக்கான படைப்பிலக்கியப் பயிலரங்கம் (நிகழ்வுக் குறிப்பு)


கலை வடிவங்களில் முக்கியமானது எழுத்து. பல நூறாண்டுகளுக்கு முன்னிருந்தே கல்வெட்டுக்களாகவும், பட்டையங்களாகவும், சுவடிகளாகவும், புத்தகங்களாகவும் கடந்த காலத்தின் வாழ்வினையும் அதன் மாந்தர்களையும் இன்றும் அறிய நமக்கிருக்கும் ஓர் பெரும் பொக்கிஷமாக இருப்பதில் எழுத்தின் பங்கு அளப்பறியது.

நிழற்படமாகவும் காணொலியாகவும் வரலாற்றைப் பதிவு செய்யத்துவங்கிய இக்காலத்திலும் கூட எழுத்து பதியப்படும் பரிமாணம் மாறுமே தவிர எழுத்தின் தேவை என்பது மாறாது.

முத்தமிழில் இசை மற்றும் நாடகத்திற்குப் பயிற்சிகளும் வகுப்புகளும் நாம் அறிந்தனவே. ஆனால் இயற்றமிழான எழுத்துக்கு..? சற்று யோசிப்போம்தானே..! அப்படி குறிஞ்சி மலர்ந்தார்ப்போல் சிறகை விரிக்கும் சொற்கள் என்ற எழுத்துப் பயிற்சிப்பட்டறை சென்னையில் நடந்தேறியுள்ளது.

"சென்னைப் புத்தக கண்காட்சியில் திருநர் மற்றும் குயர் மக்கள் குறித்த படைப்புகளுக்காக ஓர் அரங்கை அமைக்க பல்வேறு இன்னல்களை சந்தித்ததையும், குயர் படைப்பாளிகள் தம் இலக்கியங்களை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களுமே இந்தப் பயிற்சிப்பட்டறைக்கான சிந்தனைத்தூண்டலாக அமைந்தது" என்கிறார் பயிற்சி ஏற்பாட்டாளரும் திரைக்கலைஞருமான நேகா.

குயர் காஸ்டிங் என்ற அமைப்பின் மூலம் ஏற்கனவே நடிப்பிற்கான பயிற்சிப்பட்டறையை நடத்தி அதன் மூலம் 5 திருநர் நடிகர்களுக்கு விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில், "நமக்கான கதைகளை யாரோ ஒருவர் எழுதி அதைப் பிரசத்தி பெற்றப் படைப்பாக்க முடியுமென்றால் நம்மால் ஏன் முடியாது..?"

"பயிற்சியின் முடிவில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து நபர்களைக் கண்டறிந்து எழுத்தாளுமைகளின் வழிகாட்டுதலின்படி அவர்களை மேலும் கூர்தீட்டி படைப்புகளை வெளியிடச்செய்வதே இந்தப் பயிற்சிப்பட்டறையின் நோக்கம்" என்றார்.

பாலின, பாலீர்ப்பு வெளிப்பாடு காரணமாகப் பள்ளி, கல்லூரிப் படிப்பில் இடைநிற்றலுக்கு உள்ளாகும் திருநர் மற்றும் குயர் மக்களிடையே எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களின் படைப்பை வெளிகொணர்வது என்பது நிச்சயம் சவாலான பணி.

இந்தச் சவாலைச் சந்திக்கும் பொருட்டு இந்தப் பயிற்சிப்பட்டறையைச் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவுடன் இணைந்து, குயர் காஸ்டிங், குயர் மீடியா, கட்டியக்காரி மற்றும் திருநர் உணவுக்கூடம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியிருந்தனர்.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24 ஆம் தேதி தேவநேயப்பாவாணர் நூலக கட்டிடத்தில், புதுமைப்பித்தன் அரங்கில் காலை 10.30 மணிக்கு, மனம் மற்றும் உடலை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளோடு நிகழ்வு தொடங்கியது.

துவக்க உரையாக பாஸ்கர் சக்தி (எழுத்தாளர், இயக்குநர், திரைக்கலைஞர்) பேசும் போது எழுத்து என்பது காலம் கடந்தது, குறிப்பாகத் திருநர் மற்றும் குயர் மக்களைப் பற்றி யாரேனும் தெரிந்து கொள்ள நினைத்தாலும் இங்கே அதுசார்ந்த படைப்புகள் குறைவே. தெளிவில்லாத ஓர் நிலையைப் போக்குவதற்கேனும் நீங்கள் எழுத வேண்டும்.

எழுத்தாளர் கி.ரா எழுதிய கோமதி போன்றதொரு சிறுகதையை ஒரு திருநர் எழுத்தாளர் எழுதும்போது அதன் வீரியம் நிச்சயம் வேறு வகையாக இருக்கக்கூடும் என்றார்.

சமூக வலைதளங்களில் நாம் ஆக்கப்பூர்வமாகப் செயல்படுவது பற்றியும், அந்நேரங்களில் விமர்சனம் என்ற பெயரில் வரும் எதிர்வினைகளைக் கையாள்வது குறித்தும் பத்திரிக்கையாளர் கவின்மலர் வகுப்பெடுத்தார். இம்மூன்றுநாள் பயிற்சியினை இவரே நெறியாள்கை செய்தார்.

அடுத்ததாக, ஓர் செய்தியிலிருந்தும் அதை நாம் பார்க்கும் விதத்திலிருந்தும் கட்டுரைக்கான கருவை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும் என்பதனை தோழர் பா ஜீவசுந்தரி எடுத்துரைத்தார். கட்டுரைகள் உண்மையைப் பேச வேண்டும். அதற்காக நாம் நிறைய உழைக்க வேண்டும் என்பதனையும், கட்டுரைகள் சமூக அளவிலும், தன்னளவிலும் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனையும் தன் சுய அனுபவத்தின் வாயிலாக விவரித்தது பயன் தரக்கூடியதாய் அமைந்தது அவருரை.

காதல் என்ற தலைப்பின் கீழ் தங்களுக்குத்தோன்றும் எண்ணங்களைக் கவிதைகளாக எழுதுமாறு பயிற்சியாளர்ளுக்குப் பணிக்கப்பட்டது. அனைவரும் காதல் பற்றிய தத்தமது அனுபவங்களைக் காகிதத்தில் கவிதையாக்கித்தந்ததோடு முதல் நாள் பயிற்சி முடிவடைந்தது.

"சமூகத்தில் ஒடுக்கப்படக்கூடிய எல்லா வகையான விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி ஒரு கதைசொல்லியாக வளம் வரும் நிகழ்த்துக்கலை சார்ந்த அமைப்பு கட்டியக்காரி. கலையின் எல்லாவடிவமும் அரங்க நாடகத்தில் ஒன்றிணைவது போன்று அரசியல் புரிதலோடு கூட்டாக ஒன்றிணைந்து விளிம்பு நிலைமக்களுக்காகப் பணியாற்றவேண்டும். அதன் ஒரு பகுதியே திருநர் மற்றும் குயர் மக்களுக்கான இந்தச் சிறகை விரிக்கும் சொற்கள்" என்கிறார் நிகழ்வின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீஜித் சுந்தரம்.

இரண்டாம் நாள் துவக்கத்தில் சிறுகதைக்காக எழுத்தாளர் சாம்ராஜ் தனது இலக்கிய அனுபவங்களைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.

"இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் மகிழ்ச்சியைக் காட்டிலும் துயரமே அதிகம். அந்தத் துயரத்திற்கான வேரினை நோக்கி ஒருவரைச் சிந்திக்க தூண்டும் படைப்பே, ஒருவரிடம் கேள்வியை எழுப்பும் படைப்பே, ஒருவரை உலுக்கும் படைப்பே, சிறந்த படைப்பாக இருக்க முடியும்" என்றார் சாம்ராஜ்.

முதல் நாளில் பயிற்சியாளர்களிடம் படித்துவரும்படி கூறப்பட்ட கி.ராஜநாராயணனின் கோமதி, சுஜாதாவின் நகரம், வண்ணநிலவனின் எஸ்தர் ஆகிய சிறுகதைகளைப்பற்றி கலந்துரையாடிய சாம்ராஜ் அவர்கள்,   "ஓர் கதைசொல்லியாக நாம், கதைக்கான ஒழுங்கு என்ன? எதை எப்படி சொல்ல வேண்டும்? எதை விட வேண்டும்? எங்கே கொண்டு முடிக்க வேண்டும்? கதாபாத்திரத்தின் வாயிலாக எதை உணர்த்த வேண்டும்? என்பதனை உங்களின் பிரத்யேகமான கதை சொல்லும் திறத்தின் வாயிலாகப் படைப்பை உருவாக்குதல் அவசியம்" என்று கூறி சிறுகதை எழுதுவதின் நுணுக்கங்களைப் பகிர்ந்தார்.

……………..

பின்னர் 15 நிமிட இடைவெளியில் ஓர் பக்க அளவில் ஒருகதையை எழுதித்தரும்படி பயங்கேற்பாளர்களிடம் கேட்டு, தன் பயிற்றுவிப்பை முடித்துக்கொண்டார்.

"ஒரு பிடி சோறு, ஒரு பிடி அன்பு" என்ற கொள்கையின் அடிப்படையில் பெருந்தொற்றுக் காலத்தில் வறியவர்களுக்கும், நோயாளிகளுக்கும், இயலாதவர்களுக்கும் உணவளித்த.. திருநர் மக்களைக்கொண்டு நடத்தப்படும் திருநர் உணவுக்கூடம் சார்பாக ஒரு நாளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மற்ற நாட்களுக்கான மதிய உணவும் சிற்றுண்டியும் குயர் காஸ்டிங் அமைப்பு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது .

"முதலில் எழுத்தில் நம்மை நாம் கண்டுபிடிக்கவேண்டும். அதாவது நமக்கான களம் கவிதையா? சிறுகதையா? கட்டுரையா? நாவலா? என்பதை அறிய வேண்டும். அதை நாம் எழுதுவதின் மூலம்தான் கண்டறிய முடியும். எனவே எது தோன்றுகிறதோ அதை எழுதுங்கள்" என்றார் எழுத்தாளர் கரன் கார்க்கி.

அவருடைய நாவல் அனுபவப் பயணத்தில் தான் கற்ற, கடைபிடித்த விடயங்களை ஒன்றுவிடாமல் எழுதிவந்து பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கும்போது திருநர் மற்றும் குயர் சமூக மக்கள் எழுத வேண்டும் என்பதில் அவர்க்கு உள்ள ஆர்வம் தெரிந்தது.

இன்றைய சூழலில் இணையத்தின் பொழுதுப்போக்கு இடியாப்ப சிக்கலில் சிக்குண்டு கிடக்கும் நாம் இலக்கியங்களைப்படைக்க "புத்தக வாசிப்போடு, புற உலகை வேடிக்கைப் பார்த்தலும் அதனை அக உலகில் சிந்தித்தலும் அவசியம்" என்றார் கரன் கார்க்கி

தமிழ்நாட்டில் நாமக்கல்லில் பிறந்து பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க இயலாத ஓர் திருநங்கை பிற்காலத்தில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தில் தன் பெயரைப் பதிக்க முடியுமென்றால் அதற்குத் தான் எழுதிய நூல்தான் காரணம் என மூன்றாம் நாளின் துவக்கத்தில் தன்வரலாறு என்ற தலைப்பின் கீழ் தானெழுதிய வெள்ளைமொழி என்ற நூலின் வாயிலாக தான் கற்றதையும் பெற்றதையும் பற்றி எழுத்தாளர் மற்றும் அரங்க நாடகக்கலைஞருமான ரேவதி பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இதுபோன்ற பயிற்சிப்பட்டறையும், என் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் எவரும் கிடையாது. அதனால் உங்களுக்கு வாய்த்துள்ள இந்த வாய்ப்பை நல்முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்." என்றார்.

சிறகை விரிக்கும் சொற்களுக்கான பயிலரங்கத்தினைச் சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் சார்பில் ஏற்படுத்தித் தந்ததோடு அல்லாமல் கவிதை என்ற தலைப்பில் கலந்துகொண்டோரைத் தன் கருத்துகளால் மனுஷ்யபுத்திரன் கட்டிப்போட்டாரென்றே சொல்ல வேண்டும்.


"நம்மைப்பற்றி தவறாக எழுதியவற்றை மறுப்பதற்காகவே நாம் எழுதவேண்டும்" என்று மனுஷ் சொன்னது இன்றைய பாலாதிக்கச் சமூகத்தில் திருநர் மற்றும் குயர் மக்கள் சார்ந்த படைப்பின் தேவை எத்தகையது என்பதை உணர்திற்று.

"எதிலிருந்து நான் என்னை உருவாக்கிக்கொள்கிறேன் என்பது மிக முக்கியம். நமக்கான பிரச்சினை மட்டுமே பிரச்சினையல்ல அதை மட்டுமே நாம் கையாளுகையில் ஒரு குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொள்வோம் என்பதை மறக்காதீர்கள்" மேலும் பங்கேற்பாளர்களிடம் அவரவர்களின் வாசிப்பு அனுபவங்களைக் கேட்டறிந்ததோடு அல்லாமல் தன்னளவில் யாருடைய படைப்பையெல்லாம் அவசியம் வாசிக்க வேண்டும் என்ற சிறு பட்டியலையும் மனுஷ் தந்தார்.

பயிற்சிப்பட்டறையின் நிறைவாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் திருநங்கையருக்கான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அதை வெற்றிபெற வைத்தவருமான திருச்சி சிவா அவர்கள் உரையாற்றினார். பங்கேற்பாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழை வழங்கி, திருநங்கை நேகா மற்றும் திருநம்பி ரிஸ்வான் இருவரும் இணைந்து எழுதிய Love is Love புத்தகத்தை வெளியிட்டார்.

"ஊடகம், இலக்கியம், திரை சார்ந்த துறைகளில் பல்வேறு இடர்களுக்கும் போட்டிகளுக்கும் இடையேதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருநர் மற்றும் குயர் மக்கள் பங்களிப்பு என்பது உள்ளது" என்கிறார் திருநம்பி ரிஸ்வான்

அவர் தொடர்ந்து கூறுகையில் "பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்தநிகழ்வை நடத்த காரணம் சமூகத்தின் முக்கியமான தளங்களில் நமது குயர் மக்கள் தங்கள் தடங்களைப்பதிக்க வேண்டும். அதனால்தான் குயர் காஸ்டிங், குயர் மீடியா மற்றும் குயர் பப்ளிக்கேஷன் மூலம் எங்களால் இயன்றதைச் செய்கிறோம்" என்றார்.

"எழுத்தாளர் கரன் கார்க்கி தன் முதல் நாவலை எழுதிவிட்டு அதை பிரசுரிக்க 8 வருடம் காத்திருந்ததாகக் கூறினார். இப்படியான காத்திருப்பு எவ்விதத்திலும் குயர் படைப்பாளிகளை அயர்ச்சியடையச் செய்யக்கூடாது என்பதற்காகவே பயிற்சியில் பங்குகொண்ட சிறந்த ஐந்து நபர்களைக் கண்டறிந்து அவர்களின் படைப்பை, குயர் பப்ளிக்கேஷன் வாயிலாக வெளியிடவுள்ளோம்" என்ற தகவலையும் ரிஸ்வான் கூறினார்.

மூன்று நாட்களும் பயிற்சி தொய்வின்றி நடக்க அரங்கத்திற்கு வெளியிருந்து உணவு, தேநீர், பங்கேற்பாளர்களின் வருகையை உறுதி செய்தல், நிழற்படமெடுத்தலென பல்வேறு வேலைகளை ரிஸ்வானும் கூடவே தன்னார்வலரான திருநம்பி மோனிஷ் அவர்களும் ஒன்றிணைத்தனர்.

சமூக வலைதளங்களில் திருநர் மற்றும் குயர் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகள் கொண்டோரின் பதிவுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், திருநர் மற்றும் குயர் மக்கள் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படும் குயர் மீடியாவை,  திருநர் இணையர்களான ரிஸ்வான் மற்றும் நேகா நிர்வகித்து வருகின்றனர்.

"பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன் தனக்குள் இருந்த புரிதல் இன்மையும் பல்வேறு நிலைகளில் உள்ள திருநர் மற்றும் குயர் சமூகம் சார்ந்த மக்களுடன் சேர்ந்து இயங்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொண்டேன்" என திருநங்கை பாரதி கூற, பயிற்சிப்பட்டறைக்குப் பின் "இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்க்குப் பதிலாக இப்பொழுதெல்லாம் எழுத்தையே அதிகம் பதிவிடுகிறேன். என்னுடைய கோபம், ஏக்கம், மகிழ்ச்சி, கண்ணீர் எல்லாம் எழுத்தின் வழியாகவே வெளிப்பட்டு தீரட்டும்" என்கிறார் இரண்டாம் நிலை காவலர் தேர்வை எழுதி அதற்கான முடிவுக்காக 7 வருடங்களாகக் காத்திருக்கும் திருநங்கை ஆராதனா.

"பறக்க ஆசைப்படும் ஓர் பறவையின்
ஈரம் தோய்ந்த சிறகை நீவியும், உலர்த்தியும்,
இனி இப்பிரபஞ்சமே எல்லையென இலக்கிய வானில் சிறகடிக்கப் பயிற்றுவித்தது" 

என என் கருத்தையும் பதிவு செய்தேன்.

பாலாதிக்கச் சமூகத்தின் நேர்மையற்ற பார்வைக்குள் சிக்குண்டு, தன்னுடைய சுய பாலின, பாலீர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியதன் காரணமாக, கேலிகிண்டல்கள் நிரம்பிய பள்ளிக்கல்லூரி வகுப்புகளால் துரத்தியடிக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்ட ஓர் சமூகத்தில் எழுத்தாளர்களை உருவாக்குவதென்பது ஆகப்பெரும் சவால்.

இதில் வாசிப்பிற்கும் இலக்கியப்படைப்பிற்கும் இங்கு தனிச்சுதந்திரம் என்று ஒன்று வேண்டும் என்பதை மறுக்க இயலாது.

இந்தப் பாலாதிக்க ஆண் /பெண் சமுதாயத்தில் திருநர் மற்றும் குயர் மக்களின் இருப்பை, அவர்களின் குரலை, பகிரப்படாத அவர்களின் வாழ்க்கைப் பக்கங்களை, அவர்களின் உரிமையை உலகிற்கு உணர்த்த அவர்களுக்கான இலக்கியங்கள் அதிகம் அவர்களாலே உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சிப்பட்டறையின் நோக்கமும் அதுவே.

தோழர் லெனின் அவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் "புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே"

Author Picture

திருநங்கை. லக்ஷயா மன்னார்

திருநங்கை எழுத்தாளர். கலை இலக்கிய, இயக்கச் செயல்பாட்டாளர்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு