-->

அண்மை

ஆண் வேடமிட்ட பெண் - ரிஸ்வான் பாரதி

ஓவியம் - சாய் அரிதா

ஆண் வேடமிட்ட பெண் என்ற வார்த்தையை முதலில் கேட்கும் போது எனக்கு 22 வயது. தற்செயலாக என்னுடைய அழைபேசியில் வந்த புலனக் குறுஞ்செய்தியின் தலைப்பைக் கண்டதும் எனக்கு வெளவெளத்து நடுங்கி போனது.

ஏதோ என் பல நாள் ரகசியம் வெளிவந்ததுபோல மனம் பதற்றமானது, நான் என்னுடைய ஹார்மோனை சரி செய்யும் சிகிச்சையில் இரண்டாவது வருடமும் மார்பக அறுவை சிகிச்சை செய்து முடித்து ஆறு மாதங்களும் ஆகி இருந்தன. அந்த நேரத்தில், நான் என்னுடைய பாலினத்தைச் சரி செய்யும் அறுவை சிகிச்சை பாதையில் முழு தூரம் கடந்துவிட்டேன் என்ற மமமதையில் திரிந்த என் நிலையை அறிய, அறையாமலே யாரோ என் காதுகளைப் பதம் பார்த்து என் பூமியை ஒரு நிமிடம் சுழலச் செய்யும் சக்தியாக அந்தச் செய்தி இருந்தது. ரிங் என்று ஒரு சத்தம். எங்கு இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை அறியவே அரை மணி நேரத்திற்குமேல் தேவைப்பட்டது.

"ஏன் எங்களை இப்படி அழைக்கின்றார்கள்!? யார் எங்கள்மேல் இந்தச் சொல்லாடலை முதலில் பயன்படுத்தி இருப்பார்?! அப்படி அவர் இந்தச்  சொல்லாடலால் எங்களைக் குறிப்பிடும்போது அவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்!?" என்று அந்த வயதில் என்னுடைய மனதில் இருந்த கேள்விக்கு இந்த நாள் வரை பதில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இப்பொழுது தைரியமாக வெளியே வந்து பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களுடைய மக்களைச் சந்தித்து உரையாடும்போது என் கேள்விக்கான பதில்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன .

ஆண் வேடமிட்ட பெண் என்ற சொல்லாடல் முதலில் இந்த உலகத்திற்கு ஆதிக்க சிந்தனை மற்றும் ஆணாதிக்க கர்வத்தில் இருந்துமட்டுமே பிறந்திருக்கும். இந்த வார்த்தைகள் மூலம் அவர்கள் கூற வருவது "நீ என்ன பண்ணாலும் நீ ஆம்பள கிடையாது". நீ வேடமிட்டுக்கொண்டு இந்த உலகை ஏமாற்றுகிறாய் என்று எங்களின் மீது ஆணாதிக்க சிந்தனையுடையவர்களால் திணிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிப்பவர் கண்டிப்பாகப் படித்த முட்டாளாகவே இருக்கக்கூடும். ஏனெனில் பாமர மக்கள் திருநம்பியின் உடலியலைப் பற்றி அவ்வளவு பெரிதான விழிப்புணர்வைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. படித்தவர்கள்தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்கின்றனர். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடிப்பவர்களை என்ன செய்தாலும் எழுப்ப முடியாது.

திருநம்பியின் உடலியலைப் பற்றி அறியாதவர் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாதோர் "ஓ இப்படி வாழ்ந்துட்டு இருக்காங்களா?" என்று கூறியோ நினைத்துக் கொண்டோ அதைக் கடந்து சென்று விடுவார்கள் ஆனால் அவர்களின் உடலியலை நன்கு அறிந்தவர்கள் அதுவும் ஆதிக்கச் சிந்தனையுடையவர்கள் மட்டுமே அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திப்பார்கள்.

பயன்படுத்திக் கொள்வது என்ற போது இச்சையாகப் பார்ப்பது மட்டுமல்ல எங்களை ஏளனம் காட்டி தாங்கள்தான் "ஒரிஜினல் ஆண்கள்" என்று பறைசாற்றிக் கொள்கிறார்கள். முதலில் அவர்களின் எண்ணத்தை அறியாதபோது இந்தச் சொல்லாடல் என்னைக் காயப்படுத்தியது. ஆனால் அவர்களின் மன ஓட்டத்தை ஆராய முற்படும்பொழுதுதான் தெரிய வந்தது அவர்கள் திருநம்பிகளின் உடலியலை மையக் கருவாக வைத்து அனைத்தையும் பார்க்கின்றனர். அதாவது இதுவரை ஒரு பெண்ணுடல் மீது போடப்படுகின்ற அனைத்து விதமான அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் மற்றும் ஏளனப் பார்வைகள் அப்படியே இரு மடங்காகத் திருநம்பிகள் மீது திருப்பப்படுகின்றன. "கேவலம் பொண்ணா பிறந்துட்டு நீ ஆம்பளைன்னு சொல்லுவியா அத நான் ஏத்துக்கணுமா?!. அவர்களைப் பொறுத்தவரை ஆண் என்பவன் "ஆணுக்கு உரிய உடல்வாகோடு பிறந்திருக்க வேண்டும், எந்த நேரமும் நெஞ்ச நிமித்துக்கொண்டு கட்டுமஸ்தாகச் சுற்றித் திரிய வேண்டும், ஒருத்திக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் துரத்திச் சென்று காதல் செய்ய வேண்டும், எவ்வளவு வலித்தாலும் அழாமல் இருக்க வேண்டும்". ஆனால் எங்களைப் பொருத்தவரை "கட்டுமஸ்தான உடல் எங்களுக்கு இல்லை ஆனால் நாங்கள்தான், எங்களின் பார்வை எப்பொழுதும் நேராக தீர்க்கமாகச் சிறிது உங்களைவிட உயரத்தில் குறைவான தோற்றத்தில் இருக்கும் நாங்களும் ஆண்கள்தான், ஒருத்திக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளை விட்டு வெகுதூரம் சென்று விடுவோம் நாங்களும் ஆண்கள் தான், எங்களுக்கு வலித்தால் நாங்கள் அழுவோம் ஆமாம் நாங்கள் ஆண்கள்தான் தான்.
Author Picture

ரிஸ்வான் பாரதி

திருநம்பி ரிஸ்வான். தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பணியாளர். தனது இணையருடன் சேர்ந்து குயர் காஸ்டிங் மற்றும் மீடியா என்ற அமைப்பை உருவாக்கி Our Dreams Are Valid என்ற கோட்பாட்டிற்கிணங்க கலை ரீதியாக, திருநர் மற்றும் குயர் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டில் செயல்பட்டுவருகிறார். இந்தியாவின் முதல் முறையாகத் திருநம்பி மற்றும் திருநங்கை இணைந்து எழுதிய Love is Love என்னும் சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்பினைத் தன் இணையருடன் சேர்ந்து எழுதியுள்ளார். திருநம்பிகள் பற்றிய விழிப்புணர்வைக் கல்வித்துறை, காவல்துறை மற்றும் பிற நிருவாகத் துறைகளில் ஏற்படுத்தி வருகிறார். திருநம்பிகள் மத்தியில் சட்டரீதியான சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு திருநம்பிகள் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு